search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணிகள் தொடங்கியது"

    சென்னை மெரினா கடற்கரையில் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் ரூ.50 கோடி செலவில் ஜெயலலிதா நினைவிடம் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. டிச. 5-ல் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #Jayalalithaa
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ல் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரை எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    ரூ.50.8 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. பீனிக்ஸ் பறவை வடிவத்தில் பல்வேறு கலை அம்சங்களுடன் ஜெயலலிதா நினைவிடம் உருவாக்கப்படுகிறது. பொதுப்பணித்துறை மூலம் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் பணிகள் நடக்கிறது.

    கடந்த மே 7-ந்தேதி நினைவிடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அடிக்கல் நாட்டினார்கள். அதை தொடர்ந்து நினைவிடம் கட்டுமான பணிகள் தொடங்கின.

    தற்போது ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மண்டபத்துக்கான தூண்கள் அமைப்பதற்காக புல்டோசர் மற்றும் எந்திரங்கள் மூலம் துளையிடும் பணிகள் நடக்கிறது. 10-க்கும் மேற்பட்ட புல்டோசர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கான்கிரீட் பீம்கள், சுவர்கள், தரைதளம் அமைக்கப்பட்டு வருகின்றன.


    இந்த பணிகள் அனைத்தும் வருகிற டிசம்பர் 5-க்குள் முடிக்கும்படி ஒப்பந்ததாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5-ல் நினைவிடத்தை திறப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

    ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையொட்டி சமாதி அருகே தடுப்பு வேலிகள், கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பொது மக்கள் ஜெயலலிதா சமாதிக்கு சென்று பார்வையிட தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று வருகிறார்கள். #MerinaBeach #Jayalalithaa
    ×